சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்தக் கட்சிக்கு பொதுச்சின்னம் கிடைக்க உள்ளதால் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அமமுகவின் தலைமை அலுவலக முகவரி, நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட விவரங்களை ஆணையத்துக்கு கூறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளார் தினகரன்.
இப்போது அமமுக தலைமை அலுவலகம் உள்ள இடம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது என்பதால், விரைவில் புதிய இடத்திற்கு கட்சி அலுவலகத்தை டிடிவி மாற்றக்கூடும் எனக் கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது அதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ள நிலையில் அமமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் மாதம் அதற்கான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன. இந்நிலையில் இப்போது முறைப்படி அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது அமமுக.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்ய ஆட்சேபனை இருந்தால் அதனை தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது. அப்போது, தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகள் அனைத்தும் தகுதியுடையவைகளாக இல்லை என்பதால் அவைகளை நிராகரித்தது ஆணையம்.
அறிவுறுத்தல் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் அமமுகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் விவரம், நிர்வாகிகள் மாற்றம், உள்ளிட்ட விவரங்களை கால தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தலைமை அலுவலகம் இந்நிலையில், இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான இடத்தில் இப்போது அமமுக தலைமை அலுவலகம் இயங்கி வருவதால், புதிய இடத்திற்கு கட்சி அலுவலகத்தை மாற்ற நினைக்கிறாராம் தினகரன். இதற்காக ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் தலைமை அலுவலகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறதாம்.